அபர்ணா அண்ணி – 41
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன.. இரண்டு மூன்று நாட்களாக அப்பா அம்மா இருவரும் சரிவர பேசி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.. அண்ணனால் சரியான ஒரு முடிவினை எடுக்க முடியவில்லை..
அபர்ணா அண்ணி – 40→
முடிவு என்பதனை விட அவனுக்கு ஓப்பனாக இவள் தான் எனக்கு வேண்டும் என அப்பா அம்மாவிடம் கூற முடியவில்லை.. தவறு செய்து விட்டு தனக்கு இவள் தான் வேண்டும் எனக் கேட்டு வாதிடவோ சண்டை போடவோ அவன் தயாராக இல்லை.. ஆனாலும், அபர்ணா வீட்டை விட்டு சென்றதன் பின்னர் அவளுக்கு அவன் ஒரு தடவை கூட கால் பண்ணி பேசியிருக்கவில்லை.. தன்னால் அவளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கேட்டும், எது நடந்தாலும் அதனை மனம் நோகாமல் ஏற்றுக் கொள்ளும் படியும் சில மெசேஜ்களை மாத்திரமே அனுப்பி இருந்தான்.. அதற்கு அபர்ணா ரிப்ளை அனுப்பி இருக்கவும் இல்லை.. ஆனால், லீனாவுடன் அவன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தான்.. அவற்றை அவதானித்துத் தான் அம்மாவுக்கும் அந்த இறுதி முடிவினைத் தெளிவாக எடுக்க முடிந்திருந்தது.. அந்த முடிவினை முறைப்படி அபர்ணாவின் வீட்டுக்குச் சென்று அபர்ணாவின் பெற்றோர்களிடம் நேரடியாகவே பேசி கலந்தாலோசிக்க அப்பாவும் அம்மாவும் ஆயத்தம் ஆனார்கள்.. என்னையும் அவர்களுடன் அங்கு வருமாறு கேட்டுக் கொண்டார்கள்.. ஏற்கனவே அபர்ணாவைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்ட படியால் அந்த நாள் ஆபிசுக்கு லீவ் சொல்லி விட்டு நானும் அவளைப் பார்க்க ஆர்வமாக கிளம்பினேன்..
அப்பா அம்மா வருகிறார்கள் என்று நான் அவளுக்கு ஏற்கனவே தகவல் சொல்லி இருந்தேன்.. ஆனால், நிறைய நாட்களுக்குப் பின்னர் என்னைத் திடீரென காணும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதனை காணும் ஒரு அற்ப ஆசையில் சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நானும் வருகிறேன் என அவளிடம் சொல்லவில்லை..
என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனப் பயந்து பயந்து நெஞ்சம் படபடக்க ஒரு வழியாக அவளது வீட்டினை அடைந்தோம்.. அபர்ணாவின் அப்பா எல்லோரையும் உள்ளே அழைக்க நாங்களும் உள்ளே சென்று அமர்ந்தோம்.. ஆனாலும், அபர்ணா ரூமை விட்டு வெளியே வரவில்லை.. ஒரு வேளை அவளது அப்பா அம்மா அவளை வெளியே வர வேண்டாம் எனக் கூறி இருப்பார்களோ என்னவோ.. எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.. இவ்வளவு நாளைக்குப் பின்னர் அவளைப் பார்க்கலாம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தால் இவள் இப்படி பண்ணுகிறாளே என்று மனம் நொந்துகொண்டேன்..
பயங்கரமாக சண்டை போட்டு நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இரண்டு குடும்பங்கள் மீண்டும் சந்திப்பதனைப் போல ஒருவருக்கொருவர் பேசாமல் ஒருவர் மாறி ஒருவர் முகத்தினைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்..
அப்பா தான் தயங்கித் தயங்கி தான் கூற வந்திருக்கும் விடையத்தினைக் கூற ஆரம்பித்தார்..
“எல்லோரும் எங்கள மன்னிக்கணும் சம்பந்தி.. நாங்க உங்களுக்கு ரொம்பவே கஷ்டத்த குடுத்துட்டோம்..”
“நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் சம்பந்தி.. தயங்காம சொல்லுங்க..” என்றார் அபர்ணாவின் அப்பா..
“அது வந்து.. உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.. நாங்க அபர்ணா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் ன்னு.. எங்க வீட்டு மருமகள் மாதிரி இல்லாம எங்க சொந்தப் பொண்ணு மாதிரி தான் அவள நாங்க இப்பவும் நினைக்கிறோம்.. ஆனா, எங்க பையன் வாழ்க்கைல இருந்த பழைய லவ் பத்தியும் அதனால நடந்த விஷயங்கள் பத்தியும் எங்களுக்கு எதுவுமே தெரியாததனால அவன உங்க பொண்ணுக்கு கட்டி வச்சி ரொம்பவே பெரிய ஒரு தப்பு பண்ணிட்டோம்.. லீனா இன்னொருத்தர் மனைவியான பிறகு செய்ய வழி எதுவும் இல்லாமத் தான் அவன் உங்க பொண்ண கட்டிக்கொள்ள சம்மதம் சொல்லி இருக்கான்.. ஆனாலும், அந்தப் பொண்ணு இவன மறக்க முடியாம அவ புருஷன் கூடவும் ஒழுங்கா சந்தோசமா வாழம இவன் கூட பேசிட்டு இருந்திருக்கு.. யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல.. இருந்தாலும் எங்க பையன் செஞ்சது பெரிய தப்பு..”
“சோ.. உங்க பையன எங்க பொண்ணுகிட்ட இருந்து டைவர்ஸ் எடுத்து அந்த பொண்ணு லீனாவுக்கே கட்டி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க.. அப்புடித்தானே..?” என்றார் அபர்ணாவின் அப்பா..
“நீங்க சொல்றது சரி தான் சம்பந்தி.. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவர்ஸ்.. இப்ப அந்தப் பொண்ணு இவனால வாழ்க்கைய இழந்துட்டு வந்து நிக்கிறா.. அப்பா அம்மாவும் அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டாங்க.. என் பையனால அவளுக்கு ஏற்பட்டிருக்குற பிரச்சனைகளுக்கு நான் தான் பாத்து ஏதாச்சும் நல்லது பண்ணனும்.. அதே நேரம் இவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் சேத்து வச்சாலும் மறுபடியும் இதே தவறுகள் நடக்காதுன்னு எங்களால சொல்ல முடியாது… எங்க பையனால உங்க பொண்ணும் இன்னும் இன்னும் கஷ்டப்பட எங்களுக்கு விருப்பம் இல்ல.. நானும் அடுத்த சராசரி அப்பாக்கள் மாதிரி புள்ளைங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ வச்சு அவங்கள இன்னும் இன்னும் கஷ்டப்படுத்த விரும்பல.. அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. கல்யாணத்துக்கு உண்டான முழு செலவையும் நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சி எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. நீங்க இதுக்காக எங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தந்தாலும் கூட நாங்க ஏத்துக்குறோம்..”
அப்பா கூற வந்த விடயங்களை மிகவும் தெளிவாக அவர்களிடம் கூறி விட்டார்.. ஆனால் அது அவர்களுக்கு மேலும் கோபத்தினை உண்டு பண்ணியது..
“அப்போ.. உங்களுக்கு லீனா மட்டும் தான் பாவமா…? உங்களுக்கு எங்க பொண்ண பாத்தா பாவமா இல்லையா…? அவளுக்கு இனிமே யாரு நல்ல வாழ்க்க குடுக்கப் போறாங்க..? ” இப்படி பல வாய் தர்க்கங்கள்.. அபர்ணாவின் அப்பா ஒன்று கூற.. அபர்ணாவின் அண்ணா ஒன்று கூற.. அபர்ணாவின் அம்மாவும் எனது அம்மாவும் அழுது வடித்துக் கொண்டிருக்க.. அப்பா மட்டும் அவர்களை அமைதியாக சமாளித்துக் கொண்டிருந்தார்.. கிட்டத்தட்ட அரைமணி நேர வாய்த் தர்க்கங்களுக்குப் பிறகு அபர்ணாவின் அம்மா குரல் தழுதழுக்க பேச ஆரம்பித்தார்..
“எங்க பொண்ணு நல்ல மனசுக்கு அவள இப்புடி ஏமாத்த உங்க பையனுக்கு எப்புடித் தான் மனசு வந்திச்சோ எங்களுக்கு தெரியல.. ஆனா.. இனிமே எங்க பொண்ணு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவ.. வாழாவெட்டி.. இனிமே அவள யாருக்கு நாங்க கட்டிக்குடுக்கப் போறோமோ எங்களுக்கு தெரியல.. அவ வாழ்க்க என்ன ஆகப்போகுதோ தெரியல.. இருந்தாலும், பரவால்ல.. அவளுக்கு நாங்க எப்புடியாச்சும் ட்ரை பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.. உங்க எந்த உதவியும் எங்களுக்குத் தேவையே இல்ல.. இது எங்க பொண்ணு வாழ்க்க.. அத நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சு நீங்க எல்லாரும் கெளம்புங்க..”
“என்னம்மா சொல்றீங்க நீங்க…? அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு எங்களால ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நாங்களே ஒரு நல்லது பண்ணனும்ன்னு நினைக்குறது தப்பா…? அப்புடியாச்சும் எங்களுக்கு ஒரு மனசு நிறைவு கிடைக்கும்ன்னு நினைக்கிறோம்.. தயவுசெஞ்சு எங்களுக்கு அந்த ஒரு சந்தர்ப்பத்த தாங்க…” என்றார் அம்மா..
சட்டென அபர்ணாவின் ரூம் கதவு திறந்தது.. மெல்லிய சிகப்பும் மஞ்சளும் கலந்த வர்ணமயமான சேலையில் அழகே உருவாக அவள் மெல்ல வெளியே வந்தாள்.. அவளை நான் நேரில் கண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது.. அவளைக் கண்டதும் என்னை அறியாமலே எனது இமைகள் இரண்டு முறை மூடித் திறந்தது.. அவளது அழகில் மீண்டும் முதலில் இருந்து அவள் மேல் காதலில் விழுந்தேன்..