மீண்டும் அவளோடு 5
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து…
கிச்சனில் அடுப்பை பற்ற வைத்து தோசை கல் காய்ந்ததும் மாவை ஊற்றியதும் ஒதுக்கி வைத்த அவரின் நினைவுகள் மீண்டும் எனக்குள் வந்து ஆட்சி செய்ய தொடங்கியது. அது எதனால் என்று புரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன்.
அந்த யோசனையிலே ஊற்றிய தோசையை கவனிக்காததால் அது கருகி வாசம் வர என்னுடைய குழந்தைகள் இரண்டும் இருந்த இடத்திலிருந்து கத்த சுயநினைவு வந்து கல்லை பார்க்க தோசை முற்றிலும் கருப்பாக மாறி இருந்தது. அதை எடுத்து தனியாக வைத்து விட்டு மீண்டும் அவளுக்கு தேவையான தோசையை நன்றாக ஊற்றி சாப்பிட குடுத்துவிட்டு ரூமிற்குள் படுக்க வந்துவிட்டேன்.
படுத்ததும் தூக்கம் வராமல் அவரின் நினைவுடனே புரண்டு கொண்டிருந்தேன்.
இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு எதனால் நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பினால் வாழ்க்கை எதுவும் திசை மாறுமா? என எனக்குள் ஏற்கெனவே எழுந்த சந்தேங்கள் மீண்டும் மீண்டும் கேள்விகளாக எழுத்துக் கொண்டே இருந்தன.
என் பெண்களுக்காக இந்த மாதிரியான கேள்விகள் எழுந்தாலும் என்னை ஒரு பெண்ணாக உணரும் தருணத்தில் மீண்டும் அவரை சந்திப்போமா சந்திக்க முடியுமா என்ற ஆசையும் மனதுக்குள் இருக்க தான் செய்தது. மனதினுள் ஆசைகள் ஆயிரம் வரும்.
அதலாம் நிறைவேறி விடுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் காலத்திடம் ஒப்படைத்துவிட்டு பின் அந்த நினைவுகள் மறக்க முயற்சி செய்துக் கொண்டே கண்ணையும் மூடினேன்.
வெங்கடேசன் பார்வையிலிருந்து…
மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது உடலும் மனமும் மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு காரணம் ஆருயிர் காதலி கோமதியை சந்தித்தது தான். ஆனால் இன்று அவளை பார்ப்பேனா என்ற ஏக்கம் அதுவாகவே வந்து தொற்றிக் கொண்டது. அப்படி பார்த்தால் பேசுவாளா?
இல்லை குடும்பம் இருப்பதால் பேசாமல் இருந்துவிடுவாளா என்ற பயம் கூடவே இருந்தது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும் நன்மைக்கே என்று சற்று அமைதியாக இருந்தேன். படுக்கை விட்டு எழுந்து காலை கடன்களை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன்.
மார்கழி மாத குளிர்ந்த காற்று உடலில் மேல் பட்டதும் ஒரு பரவசம் உணர்வு உடல் முழுவதும் பரவி புது புத்துணர்ச்சி தந்தது. அந்த விடியற்காலையில் ஆட்கள் யாரும் அதிகமாக இல்லை. அதனால் அமைதியாக இருந்தது. அந்த சூழல் மனதிற்கும் கொஞ்சம் நிம்மதியை தந்தது.
பின் அபார்மெண்டை விட்டு வெளியே வந்து டீ கடையை நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் நடந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் டீக்கடை இல்லை என்பது தெரிய வந்தது. அபார்மெண்டிற்கு வரும் வழியில் இருந்த சிறிய பெட்டிக்கடையில் அன்றைகான தி இந்து பேப்பரை மட்டும் வாங்கிக் கொண்டு பிளாட்டிற்கு வந்தேன்.
பிளாட்டினுள் நுழைந்ததும் இதுவரை இல்லாமல் இருந்த கோமதி நினைப்பு மீண்டும் வந்துவிட்டது. ஒருவேளை என்னுடைய பிளாக்கிக்கிற்குள்ளே இருப்பதால் என்னவோ அடிக்கடி அவளை பார்க்கும் எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அந்த நினைவுடனே அன்றைய நாளிதழை புரட்டி பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின் சப்பாத்திக்கு தேவையான மாவை பிசைந்து வைத்து விட்டு செய்திகள் கேட்க டிவியை போட்டு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன தான் மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து அடுத்தடுத்த வேலைகளில் என்னை ஈடுப்படுத்திக் கொண்டாலும் மனம் ஒரு குரங்கு என்பதை நிருபித்து விடுகிறது. கோமதி பற்றிய நினைவுகள், எண்ணங்கள் மனதினுள் தோன்றிக் கொண்டே இருந்தன.
அது ஏன் அவளின் மீதிருந்த காதலா? அந்த காதல் தான் சேரவில்லையே. அந்த காதலால் மகிழ்ச்சியை விட வலி தான் ஏற்பட்டது. இருந்தும் ஏன் அவளை பற்றிய எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா? என்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை.
பின் குளித்துவிட்டு வந்து பிசைந்து வைத்த மாவை உருட்டி நான்கு சப்பாத்திகள் போட்டு சாப்பிட்டேன். இந்த இரு வேலைகளுக்கும் இடையில் அவளின் நினைவுகள் வந்து என்னையும் மனதையும் குழப்பாமல் இல்லை.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முடிவு செய்தேன். இப்போதே கிழம்பலாமா என மணியை பார்த்தேன். 8.30தான் ஆகியிருந்தது. அவள் வீட்டில் கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள்.
தேவையில்லாத சந்தேகங்கள், அதனால் பிரச்சனைகள் கூட வரலாம் எண்ணி ஒருமணி நேரத்திற்கு பின் போய் பார்க்கலாம் என முடிவு செய்து மனதை அமைதியாக கட்டுபடுத்திக் கொண்டேன்.
ஆனாலும் அந்த ஒருமணி நேரத்திற்கான ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகவே தெரிந்தது. எப்போது தான் அந்த ஒரு மணிநேரம் முடியும் என்றிருந்தது. நேரத்தை பார்க்கும் போதெல்லாம் வெகு சில நிமிடங்களே கடந்திருக்கும். நேரம் எப்போது செல்ல வேண்டும் நினைக்கிறமோ அப்போது எல்லாம் செல்லாது.
எப்போது வேகமாக செல்லகூடாது என நினைக்கிறோமோ அந்த நொடியிலிருந்து வேகமாக சென்று வேகமாகவே முடிந்துவிடும். எப்போதும் காலமும், நேரமும் நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு முரணாக தான் நடந்துக் கொள்கின்றன. இப்படி பல எண்ணங்கள் ஓட்டங்கள் மனதில் நிகழ்ந்துக் கொண்டே இருந்தன. இப்போது மணியை பார்க்கும் போது ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தன..
இது தான் சரியான நேரம் என நினைத்து அவளின் பிளாட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தேன்.. காலிங் பெல் அடித்தும் வீட்டின் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை ஆள் இல்லையா? என்று கூட தோன்றியது. மீண்டும் ஒரு முறை காலிங் பெல்லை அடித்து பார்ப்போம்.
எந்த பதிலும் உள்ளே இருந்து வரவில்லை என்றால் கிளம்பிவிடலாம் என நினைத்து காலிங் பெல்லை அடிக்க இந்த முறை, “யாரு.? கொஞ்சம் இருங்க வரேன்” என்று பதில் உள்ளே இருந்து வர, “அப்பாடா உள்ளே தான் இருக்கிறாள்” என தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து வந்து கதவை திறந்தாள். தலையில் சுற்றிய ஈரத்துண்டோடு வந்து அவள் கதவை திறந்ததும் அந்த அழகில் அப்படியே மெய்மறந்து அவளை பார்த்துக் கொண்டே நின்றுவிட்டேன். இத்தனை வருடங்கள் கடந்தும் அவளின் அழகு எதுவும் மாறவில்லை.
தலையில் இருந்து முகத்தில் இருந்த முடியில் இருந்த நீர் வடிந்து முனையில் ஒரு வினாடி நின்று பின் கையில் விழ ஏதோ மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. ஆனால் இது சுகமான மின்சாரம்.
அவளின் உடம்பில் இருந்து வழிந்து வந்து கையில் விழுந்த நீர்த்துளி கூட அவளின் மணத்தை காட்டுகிறது. ஓ. இது தான் ஒவ்வொரு பெண்ணின் மணத்தை பற்றி ஆண்கள் அறியாத ரகசியமோ மகத்துவமோ? இது மாதிரியான மின்சார தாக்குதல் அடுத்து எப்போது நிகழுமோ என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
இது மாதிரியான சுக நினைவுக்குள் மூழ்கியிருக்க நானிருக்கும் நிலையை உணர்ந்து அவளை தயங்கி தயங்கி “உள்ளாற வாங்க” கூப்பிட நானும் அந்த குரலின் இனிமையை ரசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்.
நான் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து “உட்காருங்க, இதோ வந்துடுறேன்” சொல்லி பெட்ரூம்க்குள் சென்று வரும் போது நெற்றியில் ஒரே ஒரு ஸ்க்கர் பொட்டை மட்டும் வைத்துக் கொண்டே தலையில் சுற்றிய ஈரத்துண்டோடு வந்தாள்.