மீண்டும் அவளோடு 4
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
நான் நினைத்து வந்தது இத்தனை வருடங்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்த ‘கோமதி’ என்ற பெயரை கேட்டதுமே மனத்திற்கு தன்னையும் அறியாமல் ஒரு பரவசம், மகிழ்ச்சி எல்லாம் அந்த ஒற்றை வினாடிக்குள் வந்து சென்றதே.
இதையெல்லாம் நமக்குள் ஏற்படுத்திய அந்த பெண்மணியின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தான் இந்த பிளாட்டிற்கு வந்தோம்.. ஆனால் இங்கு முப்பது வருடங்களுக்கு முன் காதல் என்ற ஒளியை என் வாழ்வில் ஏற்றிய ஒளி விளக்கை நான் இத்தனை வருடங்களுக்கு பிறகு காண்பேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை.
நான் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் எந்த அசைவும் இல்லாமல் ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் கையில் அந்த பார்சலை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தேன். எனக்கு எதிரே நெருங்கி நிற்கும் கோமதியின் முகத்திலும் எள் ஆடவில்லை.
என்னை பார்த்து அவளுக்கு மகிழ்ச்சியா? இல்லை அதிர்ச்சியா? என தெரியவில்லை. அவளின் மனதில் எதுவாக இருந்தாலும் அந்த உணர்ச்சியை முகத்தில் முழுமையாக காட்டாமல் ஒரு வித அதிர்ச்சி கலந்த பயத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்.
எங்கள் இருவருக்கும் இடையே எந்த வித பேச்சும் நடைபெறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சில வினாடிகள் பார்வையால் மட்டும் பார்த்துக் கொள்கிறோம். உள்ளிருந்து அவளின் மகளின் சத்தம் கேட்டதும் தான் இருவருமே கொஞ்சம் சுயநினைவுக்கு வந்தோம். அதிர்ச்சியிலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு முன்னால் கோமதியின் மகள் எங்களை நோக்கி கதவருகே வந்து,
“நீங்க யாரு ?என்ன பார்சல் இது?” கேட்க,
“இல்ல.. அபார்மெண்ட் வாட்ச்மேன் தான் இந்த பார்சலை இந்த பிளாட்டுல குடுக்க சொன்னான். பார்சல் இருந்த நம்பருக்கு கால் பண்ணியிருக்கான். ஸ்விச் ஆப் வந்தது.. நந்தனா.. இந்த பிளாட் தான..” பதற்றத்துடனே கேட்க
“என் சிஸ்ட்ர் தான்..” சொல்லிவிட்டு சந்தேகத்துடன் மேலும் கீழும் பார்க்க.. பின்,
“ஒன் மினிட்” சொல்லிவிட்டு கால் பண்ணி கேட்டு சில வினாடிகளிலே பார்சலை புக் பண்ணியதை கன்பார்ம் செய்துவிட்டு அவள் அம்மாவிடம் பார்சலை வாங்கிக் கொண்டு உள்ளே வர சொன்னாள். ஆனால் கோமதியோ என்னை பார்த்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளாமல் அப்படியே நிற்க.
நானும் பார்சலை என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் குழப்பத்துடனே கூட நிற்க நந்திதா அவள் அம்மா நிற்பதை பார்த்து விட்டு வந்து அவளின் தோளில் தட்ட பின் முழுமையாக சுயநினைவுக்கு வந்தாலும் நந்திதா திட்டிக் கொண்டே
“ம்மா பார்ச்சலை வாங்க சொல்லிட்டேன். நீ என்னம்மா பார்சல் வாங்காம எதையோ திங் பண்ணிட்டு இருக்க.. பாரு. அங்கிள் எவ்வளவு நேரம் கையில வச்சிட்டு நிக்கிறார்.. சாரி அங்கிள்.. நீங்க குடுங்க அங்கிள்..” என என் கையில் இருந்த பார்சலை தன் கையில் வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.
இனியும் அங்கே நின்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என நினைத்து நானாகவே அந்த இடத்தை விட்டு நகர விருப்பம் இல்லையென்றாலும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மனமில்லாமல் அங்கிருந்து என் பிளாட்டிற்கு வந்து படுக்கையில் படுத்தேன்.
என்னுடைய நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. கோமதியுடனான காதல் நினைவுகள் ஒவ்வொன்றும் காட்சியாக கண் முன்னால் ஃபோட்டா பிலிமில் பார்ப்பது போன்ற பிரம்மை. அது பிரம்மை இருந்தாலும் எல்லாம் இனிமையாக நினைவுகளாக இருந்ததால் கொஞ்சம் இனிமையாக இருந்தது.
ஆனால் அவள் என்னை விட்டு பிரிந்த சென்ற தருணத்தை மீண்டும் நினைத்தும் இதயத்தில் மீண்டும் வலி.. ஐந்து ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் அழகாக காதலித்துக் கொண்டிருந்தோம்.
அந்த அழகான காதலில் யார் கண்பட்டதோ தெரியவில்லை ஒருநாள் இரவோடு இரவாக அவளின் குடும்பம் வீட்டை காலி செய்து கொண்டு வேறொரு ஊருக்கு சென்றுவிட்டனர். இருந்தாலும் கோமதி ஏதாவது ஒருவகையில் என்னை தொடர்பு கொள்வாள் என்ற நம்பிக்கையோடு அவளின் செய்திக்காக காத்திருந்தேன்.
நாட்கள் சென்றுக் கொண்டேயிருந்ததை தவிர அவளிடமிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. கிட்டதட்ட ஒரு வருடமாக அவளை பற்றியும் அவளின் குடும்பத்தை பற்றியும் ஊரில் இருக்கும் எவரும் எந்த சரியான தகவலும் கிடைக்காததால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
ஒரு வருடத்திற்கு பிறகு அவளின் அண்ணனை ஊர்க்காரர் யாரோ சிலர் பார்த்து பேசியதாக தகவல் அடிபட்டது. கோமதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
அவள் பிரிந்த சென்றதை விட எனக்கு இது மிகவும் மனதை பாதித்தது. அந்த துயரத்தில் இருந்து மீள நாட்கள் இல்லை இல்லை மாதக் கணக்கில் ஆனது. வீட்டிலிருந்த எல்லோரும் ஏதோ ஏதோ அவர்களுக்கு தெரிந்த அறிவுரையை கதையாக கொட்டி தீர்த்தனர்.
அந்த சமயத்தில் தான் ராணுவத்தில் ஆள் எடுப்பதாக பேச்சு அடிப்பட்டு தகவல் கிடைக்க என்னை அதற்கு விண்ணபிக்க சொல்லி கட்டாயபடுத்த நானும் வேறு வழியில்லாமல் கடனே என்று விண்ணபிக்க அதில் என் படிப்பும் தகுதிக்கும் ஏற்ற வகையில் பணி கிடைத்தது.
எனக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டதால் அந்த பணியை ஏற்றுக் கொண்டு கோமதியின் பற்றிய எண்ணங்களுடனே பணியையும் தொடங்கினேன்.. நாட்கள் செல்ல செல்ல அங்கிருந்த வேலைப்பளுவில் கோமதி பற்றிய எண்ணங்கள், நினைவுகள் எல்லாம் மனதில் அதிகம் தோன்றுவதில்லை. காலப்போக்கில் அவளுடான காதல் நினைவுகள் சுவடுகளாகவே போய்விட்டன.
அதன் பின் என்னுடைய வாழ்க்கையிலும் நிறைய நிறைய மாற்றங்கள் பணி சம்மந்தமாகவும், குடும்ப வாழ்க்கையிலும் அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டே இருந்தது.
இந்த காலத்தின் வேகத்தில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன். ஒரு இரவில் கண்ணை மூடி படுத்து பகலில் முடித்தது போல் இருக்கிறது. ஆனால் இருப்பத்தைந்து ஆண்டுகள் மேல் வெகு இலகுவாக சென்றுவிட்டது.
இத்தனை ஆண்டுகளுக்கு பின் என்னுடைய வாழ்க்கையின் வாழ்நாட்களை கழிக்க வந்த இடத்தில் மீண்டும் அவளை சந்திப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. அவளை பார்த்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னை தனியாக தவிக்க விட்டு சென்று ஏற்படுத்திய காயத்தை நானே கிளறி விட்டுக் கொண்டேனோ என்ற எண்ணமும் மனதில் எழ தவறவில்லை.
கோமதியை மீண்டும் சந்தித்தது என் வாழ்வின் வரமா? சாபமா? என தெரியாமல் குழப்பத்தில் தூக்கம் பிடிக்காமல் தனியாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். முந்தைய நாள் மாதிரியே எப்போதும் கண்ணை மூடினேன் என்று தெரியாமலே இப்போதும் கண்ணை மூடியிருக்கிறேன் என்பதே நடு இரவில் முழிப்பு வர தெரிந்தது.
கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்தும்…
நானும் அந்த முகத்தை பார்த்தும் சந்தோஷபடுவதா இல்லை அவரை விட்டு பிரிவதற்கு நானே ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறேன் என நினைத்து வருத்தபடுவதா என தெரியாமல் அமைதியாக சோபாவில் உட்காந்திருந்தேன். ஆனால் அவரை விட்டு பிரிந்து வந்த நாட்களில் அவரை எப்படியாவது ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய நாட்கள் பல உண்டு.
அந்த ஏக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே என்னுடைய திருமணத்தை என் சம்மதமில்லாமல் பேசி முடித்து பதினைந்து நாட்களுக்குள்ளாகவே திருமணமும் முடிந்துவிட்டது. அதன் பின் அவரை சந்திக்கவே முடியாது என தெரிந்துவிட்டது. ஆனால் அவரின் நல்ல மனதுக்கு எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என அவரை பற்றி நினைக்கும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்..